தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாகக் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்த தங்கவேல் என்பவர், அதே பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தச் சிறுமியின் செல்போனுக்கு நள்ளிரவு நேரங்களில் ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பி ஆசிரியர் தங்கவேல் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி தன் தோழிகளிடம் கூற, மற்ற ஆசிரியர்கள் தங்கவேலைக் கண்டித்தும் அவர் தனது வக்கிர புத்தியை மாற்றிக் கொள்ளவில்லை. பொறுமை இழந்த மாணவி பெற்றோரிடம் நடந்த கூத்துகளைக் கூறவே, ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டுத் தலைமை ஆசிரியரிடம் சரமாரியாகப் புகார் அளித்து நியாயம் கேட்டனர்.
தகவலறிந்து இடத்திற்கு விரைந்த மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் பாப்பாரப்பட்டி போலிஸார் தீவிர விசாரணை நடத்தியதில் ஆசிரியர் தங்கவேல் செய்த ஆபாச அத்துமீறல்கள் அனைத்தும் அச்சுபிசகாமல் உறுதியாயின. இதையடுத்து, பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலிஸார் தங்கவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கப் பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், இவர் ஏற்கனவே பல பள்ளிகளில் இதேபோல மாணவிக்குத் தொல்லை கொடுத்துப் புகார்களில் சிக்கி, இடமாறுதல் செய்யப்பட்டு இங்கு வந்தவர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
