சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற 69 வயது முதியவர் ஒருவர் கால் நழுவி விழுந்து பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையே சிக்கி 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற புறநகர் ரயில் எழும்பூர் நிலையத்தை விட்டுப் புறப்பட்டபோது, முகம்மது இலியாஸ் (69) என்ற முதியவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் நழுவி, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட ஆபத்தான இடைவெளியில் சிக்கிக்கொண்டார். ரயில் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நகர்ந்ததால், அவர் சுமார் 50 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாகக் கூச்சலிட்டு அலறினர். பயணிகளின் அலறல் சத்தத்தைக் கேட்ட லோகோ பைலட் உடனடியாகச் சமயோசிதமாக ரயிலை நிறுத்தினார். அதே நேரத்தில் அங்குப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் நாராயண் சிங் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, முதியவரைப் பத்திரமாக மீட்டு உயிருடன் காப்பாற்றினார். இந்த விபத்தில் காலில் பலத்த காயமடைந்த முதியவர் முகம்மது இலியாஸ் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
