ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. எனினும், அரசுத் தரப்பில் இதுவரை முறையான பேச்சுவார்த்தை நடத்தப்படாததால், போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, இன்று பணிநேரம் முடிந்தவுடன் டாஸ்மாக் கடைகளின் சாவிகளை அந்தந்த மாவட்ட மேலாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு, நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த திடீர் வேலைநிறுத்த அறிவிப்பால் நாளை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்பதில் ஊழியர்கள் உறுதியாக உள்ளனர். இதனால் மது விற்பனை பாதிக்கப்படுவதோடு, அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இன்று மாலைக்குள் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்குமா அல்லது கடைகள் மூடப்படுமா என்பது மதுப்பிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
