திருப்பத்தூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கடந்த நவம்பர் 1 முதல் புதிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்கினால் யுபிஐ (UPI), கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது; மேலும், இந்த வரம்பு வரும் 2027 ஜனவரி 1 முதல் ரூ.500-ஆக குறைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, புதிய ஸ்கேன் நடைமுறைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையால் விற்பனை வெகுவாகத் தாமதமாவதோடு, கடைகளில் கூட்ட நெரிசலும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இதன் காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகள் பிற்பகலுக்கு மேல் மூடப்பட்டதால் மதுப்பிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதியில் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு, கல்லுடைக்கும் தொழிலாளி ஒருவர் தனது கைகளில் உள்ள உழைப்புத் தழும்புகளைக் காட்டி ஆவேசமாகப் பேசினார். “உழைத்துப் பணம் சம்பாதித்தும் மதுபானம் வாங்க முடியவில்லை; என் பணம் என் உரிமை, எனக்கு சரக்கு வேணும், இங்கிருந்து செல்வதாக இல்லை” எனக் கோரிக்கை விடுத்த அவர், கடையை உடனடியாகத் திறக்க வேண்டும் அல்லது நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது அவர் திடீரென “டிவிகே ஒழிக, டிவிகே ஒழிக” என தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக முழக்கமிட்டது அங்கிருந்தவர்கள் மத்தியில் வியப்பையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியது. புதிய டிஜிட்டல் நடைமுறையால் ஏற்பட்டுள்ள விற்பனைத் தாமதம் மற்றும் கூட்ட நெரிசல் போன்ற சிக்கல்கள் மதுப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
