“ரூ.10 உயர்வு இல்லை… ஆனால் ரூ.1,000 கோடி அரசு கணக்கில் வரப்போகுது”….. டாஸ்மாக்கில் வந்த மாஸ் மாற்றம்…. அமைச்சர் அளித்த நச் விளக்கம்….!

By Nanthini on ஐப்பசி 31, 2026

Spread the love

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் டாஸ்மாக் மதுபான விலை உயர்வு தொடர்பான தகவல்களுக்கு தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தெளிவான விளக்கமளித்துள்ளார். வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை ரூ.10 உயருவதாக தகவல்கள் பரவிய நிலையில், புதிதாக எந்தவொரு வரியும் விதிக்கப்படவில்லை என்றும், பாட்டில்களை திரும்பத் தரும்போது இந்த ரூ.10 வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்கிவிடப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் சில்லறை விற்பனை விலைக்கு (MRP) கூடுதலாக ரூ.10 ரொக்கமாகப் பெறப்பட்டு, காலி பாட்டில்களைத் திரும்பத் தரும்போது அப்பணம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இத்தொகை அரசின் கணக்கில் வராமல் தனிநபர்களின் கைகளுக்குச் சென்று தவறான முன்னுதாரணத்தை உருவாக்கியது. இத்தகைய முறைகேடுகளையும் குழப்பங்களையும் தடுக்கும் நோக்கிலேயே, தற்போது ‘சுற்றுச்சூழல் வரி’ என்ற பெயரில் அந்த ரூ.10 அச்சிடப்பட்ட எம்.ஆர்.பி (MRP) விலையிலேயே சேர்த்து வசூலிக்கப்படவுள்ளது.

   

முந்தைய ஆட்சியில் 99% காலி பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்ட நிலையில், தற்போதைய சோதனையில் 55% முதல் 60% பாட்டில்கள் மட்டுமே திரும்புவது தெரியவந்துள்ளது. இந்த ரூ.10 கூடுதல் தொகையின் மூலம் மாதத்திற்குச் சுமார் ரூ.300 கோடியும், ஆண்டுக்கு ரூ.3,600 கோடியும் புழக்கத்தில் உள்ளது. இதில் 40% பாட்டில்கள் திரும்ப வராததால், ஆண்டுக்குச் சுமார் ரூ.1,200 கோடி முதல் ரூ.1,600 கோடி வரையிலான பெருந்தொகை கணக்கில் வராமல் எங்கே போகிறது என்றே தெரியாத நிலை நீடித்து வந்தது.

   

தற்போது இத்தொகை நேரடியாக எம்.ஆர்.பி விலையிலேயே சேர்க்கப்படுவதால், அந்தப் பணம் முழுமையாக அரசின் கஜானாவுக்குச் சென்றடையும். மேலும், இனி பாட்டில்களை விற்பனை செய்யும்போதும், காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும்போது அவற்றைக் கட்டாயமாக ஸ்கேன் செய்யும் புதிய நடைமுறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கும் அதிகமான நிதி இழப்பு தடுக்கப்பட்டு அரசின் கணக்கிற்குள் கொண்டுவரப்படும்.

 

டாஸ்மாக் மற்றும் மதுவிலக்குத் துறையைச் சீரமைப்பதில் அரசு மிகத் தெளிவாகச் செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட அமைச்சர், அதே வேளையில் இத்துறையை வளர்ப்பதோ அல்லது ஊக்குவிப்பதோ அரசின் நோக்கம் அல்ல என்பதையும் திட்டவட்டமாகப் பதிவு செய்துள்ளார். பொதுமக்கள் எம்.ஆர்.பி விலையை மட்டும் செலுத்தி மதுபானங்களை வாங்கி, காலி பாட்டில்களை ஒப்படைத்துத் தங்கள் ரூ.10 தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.