தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சமீபத்தில் தமிழகம் முழுவதும் 45 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உட்பட 7 பேர் மீது அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் திட்டமிட்டு நடத்தப்பட்ட முறைகேடுகள் குறித்த விரிவான விவரங்கள் அம்பலமாகியுள்ளன.
மதுபான ஆலைகளில் இருந்து மதுக் கொள்முதல் செய்வது, பார்களுக்கான டெண்டர் வழங்குவது, மதுக் பாட்டில்களை ஏற்றிச் செல்லும் வாகனப் போக்குவரத்து ஒப்பந்தங்கள், பழைய பாட்டில்களைக் கொள்முதல் செய்வது மற்றும் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் பணி நியமனம் வரை அனைத்து நிலைகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக எஃப்.ஐ.ஆர்-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ‘பார்ட்டி பண்ட்’ என்ற பெயரில் சட்டவிரோதமாக நிதி வசூலிக்கப்பட்டதாகவும், ‘கரூர் கேங்’ என்று அழைக்கப்படும் அமைப்பினர் இதன் பின்னணியில் இருந்து செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சாதாரண மதுப்பிரியர்களிடம் பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும், வெளிநாட்டு மதுபானங்களுக்கு 500 ரூபாய் வரையிலும் கூடுதல் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுமொத்த முறைகேடுகளுக்கும் ரத்தேஷ்ராஜ் சண்முகவேல் மற்றும் மூலனூர் கார்த்திக் ஆகிய இருவரே முதன்மைச் சூத்திரதாரிகளாகச் செயல்பட்டுள்ளனர் என்றும், அவர்களின் வழிகாட்டுதலின்படியே அரசு அதிகாரிகளான விசாகன், மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் என்றும் எஃப்.ஐ.ஆர் சுட்டிக்காட்டுகிறது. பார்கள் டெண்டர் ஒதுக்கியதில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்ததால், 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் மட்டும் கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சுமார் 32.8 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், டாஸ்மாக் வாகனப் போக்குவரத்துக்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் 100 கோடி ரூபாயிலும் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்ட சில பிரிவுகளின் இழப்பு மற்றும் அதிகப்படியான வசூல் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ள நிலையில், 2021 முதல் 2025 வரை அரசுக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்தப் பண இழப்பு எவ்வளவு என்ற முழுமையான விவரம் இடம்பெறவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறை விரைவில் தாக்கல் செய்யவுள்ள கூடுதல் எஃப்.ஐ.ஆர்-இல் இந்த முறைகேட்டின் முழுமையான நிதி இழப்பு குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
