தமிழகத்தில் மதுபான சில்லறை விற்பனை மற்றும் டாஸ்மாக் பார்கள் மாநில அரசின் முக்கிய வருவாய் ஈட்டும் துறைகளில் ஒன்றாக விளங்குகின்றன. முந்தைய திமுக மற்றும் அதிமுக ஆட்சிக்காலங்களில் டாஸ்மாக் கொள்முதல் மற்றும் பார் டெண்டர்களில் பல்வேறு விதிமீறல் புகார்கள் எழுந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இத்துறையில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சட்டமன்றத் தேர்தல் காரணமாக பலமுறை நீட்டிக்கப்பட்ட பார்களின் அனுமதி, தற்போது மேலும் இரண்டு மாதங்களுக்கு அதாவது டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாட்டின் நிலை குறித்தும் அரசின் நடவடிக்கைகள் குறித்தும் அரசியல் களத்தில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இந்தச் சூழலில், புதிய விதிமுறைகளின்படி தவெக அரசு பார்களுக்கான டெண்டர் முறையை அறிவித்துள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஒட்டியோ அல்லது அங்கிருந்து 100 மீட்டர் தூரத்திலோ பார்கள் அமையலாம் என விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வளர்ச்சி மற்றும் நகர திட்டமிடல் ஆணையங்களில் வணிகம் அல்லது தொழிற்சாலைகளுக்கு தூரக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
புதிய வழிகாட்டுதல்களின்படி, மலைப்பகுதிகளில் ஒருங்கிணைந்த பழங்குடி மேம்பாட்டுத் திட்டப் பகுதிகளில் பார்கள் அமைக்க கண்டிப்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாரும் குறைந்தபட்சம் 20 சதுர மீட்டர் தரைதள பரப்பளவைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன், குடிநீர் மற்றும் கைகழுவும் வசதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. பார் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைத் தூய்மையாகப் பராமரிப்பதோடு, மது அருந்துபவர்கள் அமர்வதற்குத் தகுந்த மேஜை மற்றும் நாற்காலிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் சமூக நலனைக் கருத்தில் கொண்டு, பார்களுக்கு வெளியே மது அருந்துவது உடல் நலத்திற்குக்கேடு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற வேண்டும். 21 வயதிற்குட்பட்ட நபர்களைப் பார்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதோடு, அவர்களைப் பணியிலும் அமர்த்தக் கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், மதுபானம் அருந்துவது வெளியில் தெரியாத வகையில் முறையான தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விதிகளின் மீறல்களைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட வட்டாட்சியர் பதவிக்குக் குறைவான பதவிகளில் இருப்போரும், கோட்ட ஆயத்தீர்வைக்குக் குறைவான அதிகாரிகளும் பார்களில் ஆய்வு நடத்த அதிகாரம் பெற்றுள்ளனர். ஆய்வுகளில் விதிமீறல் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் இந்த மாதம் கோரப்பட்டு, அடுத்த மாத இறுதியில் அனுமதி வழங்கப்படும் எனவும், 2027 ஜனவரி முதல் புதிய ஒப்பந்ததாரர்கள் பார்களை இயக்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
