செஞ்சி சிறுமி வழக்கு…. 600 செல்போன் டவர்கள், பெங்களூரு வரை தேடுதல்… எங்கு மறைந்துள்ளது அந்த ரகசியம்?…. சிபிசிஐடி பிடியில் திடுக்கிடும் உண்மைகள்…..!

By Nanthini on கார்த்திகை 2, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சில மணி நேரங்களில் மர்மமான முறையில் மாயமானார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து 20 நாட்களைக் கடந்தும், தமிழகத்தையே உலுக்கி வரும் இவ்வழக்கில் இதுவரை சிறுமி குறித்த எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை. காடுகள், விவசாயக் கிணறுகள் மற்றும் ஏரிகள் என பல நூறு கிலோமீட்டர் சுற்றளவில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட போதிலும், சிறுமியின் சுவடு கூட கிடைக்காமல் போனது வழக்கில் மர்மத்தை மேலும் ஆழப்படுத்தியுள்ளது.

தொடக்கத்தில் வெளி நபர்கள் மற்றும் வெளிப்புறத் தடயங்களை நோக்கியே சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் வேல்முருகன், கீதா தலைமையிலான தனிப்படையினர் தீவிர கவனம் செலுத்தினர். 600-க்கும் மேற்பட்ட செல்போன் கோபுர அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், சரித்திரப் பதிவேட்டு குற்றவாளி ராஜதுரையிடமும், பெங்களூருவில் உள்ள உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், வனத்துறையுடன் இணைந்து பாறை இடுக்குகள் வரை கூட்டுத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டும் எந்தத் தடயமும் சிக்காததால், வெளிப்புற ஆட்கள் கடத்தியிருந்தால் கோரிக்கையோ தடயமோ கிடைத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்தனர்.

   

இதன் காரணமாக, “உண்மையான சூத்திரதாரி வீட்டுக்குள்ளேயேதான் இருக்கிறார்” என்ற ஆரம்பகட்ட முடிவுக்கு சிபிசிஐடி மீண்டும் வந்துள்ளது. வழக்கின் தொடக்கப் புள்ளியான சிறுமியின் தந்தை வடிவேலுவிடம் நடத்தவிருந்த விசாரணை அவரது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தள்ளிப்போன நிலையில், தற்போது அவர் உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து ஆலம்பூண்டி பள்ளி முகாம் அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குடும்பத்திற்குள்ளேயே ஏதேனும் ரகசியம் புதைந்துள்ளதா என்ற கோணத்தில் இந்த விசாரணை தீவிரமடைந்துள்ளது.

   

தந்தை வடிவேலுவிடம் எழுப்பப்படும் முக்கிய கேள்விகளில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் அவரும் பாட்டியும் இல்லாததும், நள்ளிரவில் அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதும் பிரதானமாக உள்ளது. மேலும், நடுப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருடனான பணத் தகராறு மற்றும் முன்விரோதம், வழக்கமாக ஜன்னலைத் திறக்கும் வழக்கம் கொண்ட குடும்பம் அன்று மட்டும் வாசற்கதவைத் திறந்து வைத்துத் தூங்கியது ஏன் போன்ற முரண்பாடுகள் குறித்து அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

பெங்களூரு உறவினர்களுடன் குழந்தை காணாமல் போவதற்கு முன்னரும் பின்னரும் வடிவேலு மேற்கொண்ட செல்போன் அழைப்புகளின் பின்னணியும் தற்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. தாய் பவானியிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களையும், தற்போது தந்தை வடிவேலுவிடம் பெறப்படும் பதில்களையும் சிபிசிஐடி அதிகாரிகள் நேருக்கு நேர் வைத்து தீவிரமாக ஒப்பிட்டு வருகின்றனர்.

ஊர் முழுவதும் சல்லடை போட்டுவிட்டு மீண்டும் முதல் நாளுக்கே திரும்பி தந்தையிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது, குடும்ப வட்டாரத்திற்குள் புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொணரும் இறுதிக்கட்ட முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இத்தனை நாட்களாக நீடித்து வரும் மர்மங்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சிபிசிஐடி அதிகாரிகள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.