விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை…. அடுத்த 4 நாட்களுக்கு அடிச்சு தூக்கப் போகுது கனமழை…. தமிழகத்திற்கு காலையிலேயே வந்த அலெர்ட்….!

By Nanthini on ஐப்பசி 23, 2026

Spread the love

தமிழகத்தில் நேற்று மாலை முதல் விடிய விடிய பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா, தென் தமிழகம் மற்றும் உட்புற மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தெற்குச் சென்னையிலிருந்து மேகங்கள் நகருக்குள் வரத் தொடங்கியுள்ளதாகவும், அக்டோபர் 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகள் சென்னைக்கு மிகச்சாதகமான நாட்களாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக, கேரளப் பகுதிகள் நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக, இன்று (அக்டோபர் 23) கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

   

மேலும், சென்னை, திருவள்ளூர், சேலம், ஈரோடு, மதுரை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

   

இதற்கிடையில், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 26 வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்படிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.