காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழ்நாடு காவல்துறையினர் தங்களது சீருடையில் அணியும் கொடி நாள் வில்லையில் தாய்மொழியான தமிழ் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு, இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ஆட்சிமொழியான தமிழுக்கே காவலர் சீருடை வில்லையில் இடமில்லாத அவலநிலையை தமிழக அரசு ஏற்படுத்தியிருப்பது வெட்கக்கேடானது என்று அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் சாடியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சுற்றறிக்கை வெளியிட்டு, இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றுள்ள வில்லையை அணிய அறிவுறுத்தியுள்ளது அதிர்ச்சியளிப்பதாகச் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழைத் தவிர்த்துவிட்டு இந்தியை மட்டும் திணிக்கும் ஒன்றிய அரசின் முடிவை எவ்வித எதிர்ப்புமின்றி தமிழக அரசு ஏற்றுக்கொண்டது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், இதுதான் இந்தி திணிப்பையும் ஒன்றிய அரசின் ஆதிக்கத்தையும் எதிர்க்கும் முறையா என்றும், தங்களின் இருமொழிக் கொள்கை இதுதானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழ் மொழியையும் உரிமையையும் பாதுகாக்கப் பல தலைமுறைகளாக நம் முன்னோர்கள் போராடி உயிர் தியாகம் செய்துள்ளனர். மொழிப்போர் தியாகிகளின் ஈகத்தால் காக்கப்பட்ட தமிழை, ஒன்றிய அரசின் ஒரு கடிதத்திற்காகப் புறக்கணிப்பது வரலாற்றுத் துரோகமாகும். தமிழர்களின் வரிப்பணத்தில் இயங்கும் தமிழ்நாடு காவல்துறையின் சீருடையில் தாய்மொழி இடம்பெறுவதைத் தடுப்பதற்கு ஒன்றிய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றும், அதற்கு மாநில அரசு அடிபணிவது தமிழ்நாட்டிற்கு நிகழ்ந்த மிகப்பெரிய அவமானம் என்றும் சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த இருமொழிக் கொள்கையின்படி, தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். தமிழ் இடம்பெறாத வில்லையை அணிய அறிவுறுத்தும் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற்று, அன்னைத் தமிழ்மொழிக்கு முதன்மையளிக்கும் வகையில் புதிய வில்லையை வழங்க வேண்டும் என்றும், தமிழ் மொழியைப் புறக்கணித்த வரலாற்றுப் பிழைக்காக தமிழக அரசு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
