“4.536 TMC பத்தாது… 26.954 TMC வேண்டும்”…. களத்தில் இறங்கிய முதல்வர் விஜய் – சுப்ரீம் கோர்ட்டில் அதிரடி திருப்பம்…. கர்நாடகாவுக்கு செக்….!

By Nanthini on ஆவணி 4, 2026

Spread the love

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தெளிவான உத்தரவுகளையும் மீறி, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைத் திறந்து விட மறுத்து வருகிறது. கடந்த ஜூலை 28 அன்று நடைபெற்ற CWRC கூட்டத்தில், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 வரை தினமும் 3,500 கனஅடி வீதம் பில்லிகுண்டுலுவில் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து ஜூலை 30 அன்று நடைபெற்ற ஆணையத்தின் அவசரக் கூட்டத்திலும் இந்த முடிவு உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை பில்லிகுண்டுலுவுக்கு வந்த நீரின் அளவு வெறும் 158 முதல் 550 கனஅடியாக மட்டுமே இருந்தது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ், கபினி, ஹாரங்கி மற்றும் ஹேமாவதி ஆகிய நான்கு முக்கிய அணைகளிலும் சேர்த்து மொத்தம் 77.537 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. இதில் பயன்பாட்டு நீர் இருப்பு மட்டும் 67.517 டி.எம்.சி ஆகும். போதிய நீர் இருப்பு கையில் உள்ள நிலையில், விகிதாச்சார அடிப்படையில் பில்லிகுண்டுலு மூலம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு எவ்வித சிரமமுமின்றி திறந்து விட்டிருக்க முடியும். ஆனால், அணைகளில் நீர் நிரம்பியிருந்தும் தமிழகத்திற்குரிய நீரை வழங்க கர்நாடகா தொடர்ந்து அடம்பிடித்து வருகிறது.

   

கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் நீரியல்-வானிலை தரவுகளின்படி பார்த்தால், விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உண்மையான நீரின் அளவு 26.954 டி.எம்.சி ஆகும். ஆனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட 4.536 டி.எம்.சி நீரே மிகவும் குறைவான அளவாக இருக்கும் சூழலில், அதைக் கூட வழங்க கர்நாடகா மறுத்து வருவது தமிழகத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

   

கர்நாடக அரசின் இந்த ஒருதலைப்பட்சமான போக்கைக் கண்டித்தும், தமிழகத்தின் விவசாயப் பாசன உரிமைகளைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து, முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய 26.954 டி.எம்.சி நீரை உடனடியாகப் பெறக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 3 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இச்சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் குறித்த காலத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.