தமிழகத்தில் அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் என்றால் அது புதுக்கோட்டை தான். இந்த மாவட்டத்தில்தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் என்று மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள் இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி 2026 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி தச்சங்குறிச்சியில் புனித விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டி அந்த கிராம ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர். இந்நிலையில் வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.
