தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னையில் மூன்று நாள் “மீடியா ட்ரோன் பயிற்சி” வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 06.07.2026 முதல் 08.07.2026 வரை கிண்டியில் உள்ள ஈக்காட்டுத்தாங்கல் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் இப்பயிற்சி நடைபெறும். இதில் ட்ரோன் தொழில்நுட்ப அறிமுகம், சினிமாடோகிராஃபி நுட்பங்கள், வான்வழிப் புகைப்படம், FPV சினிமாடோகிராஃபி மற்றும் DGCA விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளன.
இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு, செய்தி ஊடகங்கள், யூடியூப் உள்ளடக்க உருவாக்கம், ரியல் எஸ்டேட், பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் போன்ற பல்வேறு துறைகளில் விரிவான வேலைவாய்ப்புகளும், தொழில் முனைவோர் ஆவதற்கான வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. மேலும், மத்திய/மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவிகள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் போது விளக்கப்படும் என்பதுடன், பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும்.
18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, அடிப்படை கணினி அறிவு கொண்ட ஆண், பெண், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் என அனைவரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். வெளியில் இருந்து வருபவர்களுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதியும் உண்டு. கூடுதல் தகவல்களைப் பெறவும், முன்பதிவு செய்யவும் www.editn.in என்ற இணையதளத்தையோ அல்லது 8668100181 / 99360221280 ஆகிய கைபேசி எண்களையோ தொடர்பு கொள்ளலாம்.
