“ஏஐ படிக்க ஆசையா..? தமிழக அரசின் 3 நாள் இலவச பயிற்சி… எங்கு, எப்போது…? முழு விவரம் உள்ளே…!”

By Swetha on ஆனி 17, 2026

Spread the love

தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் “செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் அடிப்படைகள்” என்ற தலைப்பில் 3 நாள் முழுநேர பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இந்த இலவசப் பயிற்சி வரும் ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சென்னை கிண்டியில் உள்ள EDII-TN வளாகத்தில் நடைபெறவுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கில், AI-இன் நடைமுறைப் பயன்பாடுகள், மெஷின் லேர்னிங், டீப் லேர்னிங் போன்ற லார்ஜ் லாங்க்வேஜ் மாடல்களை டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பது குறித்து இதில் விரிவாகக் கற்றுத்தரப்படும்.

இப்பயிற்சியில் வாடிக்கையாளர் நடத்தை, சமூக ஊடக உத்திகள் மற்றும் ஆன்லைன் விளம்பரம் போன்ற சந்தைப்படுத்தல் அடிப்படைகளுடன், முக்கிய AI கருவிகளின் நடைமுறைப் பயன்பாடுகளும் விளக்கப்படும். குறிப்பாக, உள்ளடக்க உருவாக்கத்திற்கான Jasper, கிராஃபிக் வடிவமைப்பிற்கான Canva AI, தேடுபொறி உகந்ததாக்கலுக்கான SEMrush & Surfer SEO மற்றும் சமூக ஊடகப் பகுப்பாய்விற்கான Sprinklr போன்ற நவீனக் கருவிகள் குறித்து நேரடிப் பயிற்சி அளிக்கப்படும். மேலும், குழு அடிப்படையிலான செயல்பாடுகள் மூலம் பங்கேற்பாளர்கள் AI உத்திகளைப் பயன்படுத்தி நேரடி விளம்பரப் பிரச்சாரங்களை உருவாக்கும் அனுபவ அறிவையும் பெறலாம்.

   

இந்த வகுப்பில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, குறைந்தபட்ச கணினி அறிவுள்ள மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். வெளியூரிலிருந்து வரும் மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத்திலான தங்குமிட வசதியும் தேவைக்கேற்ப வழங்கப்படும். இப்பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு கட்டாயம் என்பதால், ஆர்வம் உள்ளவர்கள் www.editn.in என்ற இணையதளத்திலோ அல்லது 9840114680 / 9360221280 ஆகிய கைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு உடனடியாகப் பதிவு செய்து கொள்ளலாம்.