இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் ‘நாட்டாமை’ படத்தின் மூலம் 3 வயதில் அறிமுகமாகி, ஆறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சாதனை படைத்தவர் மகேந்திரன். தாய்க்குலமே தாய்க்குலமே, தேவி போன்ற படங்களுக்காக தமிழக அரசு மற்றும் நந்தி விருதுகளை வென்ற இவர், 2013-ல் விழா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர், நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து ‘மாஸ்டர் மகேந்திரன்’ என்று பரவலாக அறியப்பட்ட இவரது அண்மைக்கால பேட்டி ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினை குறித்து அண்மையில் பேட்டி அளித்த மகேந்திரன், மின்சாரம் இல்லை என்றால் சோலார் சிஸ்டம் பயன்படுத்தியிருக்கலாம். இவ்வளவு காலம் மின்சாரப் பிரச்சினை இல்லாமல் ஜாலியாக இருந்துவிட்டு இப்போது கேள்வி கேட்கிறீர்களா? என்று பேசினார். மேலும், என் வீட்டில் உள்ள மின்சாரத்தை கூட எடுத்துக் கொள்ளுங்கள், கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா? நீங்கள் கேள்வி கேட்பதை நிறுத்தினால் தான் பதில் கிடைக்கும் என்று அவர் பொதுமக்களை நோக்கிப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், “கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா என்ற கேள்வியை நான் மக்களைப் பார்த்துக் கேட்கவில்லை; மின்சாரத்தை வைத்தும், மக்களின் உணர்ச்சிகளை வைத்தும் அரசியல் செய்பவர்களுக்கு எதிராகத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டேன்” என்று கூறியுள்ளார்.
