தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், ஏமாற்றுதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பரபரப்பான புகார்களைத் தெரிவித்து பாஜக தேசிய மேலிடத்திற்கு கடிதம் எழுதியுள்ளது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த அந்தப் பெண், தமிழ்நாடு பாஜக ஓபிசி அணியில் முக்கிய நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார். தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ், தேசிய நிர்வாகிகள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி மற்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மேலிடத் தலைவர்களுக்கு அவர் விரிவான புகார் மனு அனுப்பியுள்ளார்.
அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், “நான் மாற்றுத்திறனாளிகளான இரு குழந்தைகளுக்குத் தாயாக இருந்து, தனியாக அவர்களைக் கவனித்துக்கொண்டு அரசியல் பணியாற்றி வருகிறேன். என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய கருப்பு முருகானந்தத்தின் வார்த்தைகளை நம்பி, கர்நாடக பாஜகவில் எனக்கு இருந்த மாநில அளவிலான பதவியைத் துறந்து 2024-ஆம் ஆண்டு திருச்சிக்குக் குடிபெயர்ந்தேன். ஆனால், தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு அவர் என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கினார். அவருடனான உறவின் காரணமாக நான் கர்ப்பமான நிலையில், எனது விருப்பத்திற்கு மாறாக அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்தார். மேலும், அது தொடர்பான மருத்துவ ஆவணங்களையும் அவர் திருத்தி மறைத்துவிட்டார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து தனது மனுவில், 2026 சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறித் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அந்தப் பெண், தனது குழந்தைகளின் பள்ளி ஆவணங்களிலேயே கருப்பு முருகானந்தத்தின் பெயர் பாதுகாவலராக (Guardian) இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கேட்டபோது, தன்னையும் தன் குழந்தைகளையும் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தியதுடன், பெங்களூரில் உள்ள தனது சொந்த வீட்டை ஆக்கிரமித்துத் தன்னைத் தெருவில் நிறுத்த முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு நேர்ந்த இந்த அநீதிகளையும் குற்றச்சாட்டுகளையும் நிரூபிப்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் பாஜக மேலிடத்திடம் வழங்கத் தயாராக இருப்பதாக அந்தப் பெண் நிர்வாகி உறுதி அளித்துள்ளார். கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் ஒருவர் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கட்சித் தலைமை உடனடியாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், தன்னைப்போல் வேறு எந்தப் பெண்ணும் பாதிக்கப்படாமல் இருக்க கருப்பு முருகானந்தம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
