தமிழ் சினிமாவுக்கு வயது 100ஐத் தாண்டிவிட்டது. தமிழ் சினிமாவில் முதல் முதலில் வெளியான திரைப்படம் காளிதாஸ். வெளியான அண்டு 1932 . இன்னும் 8 ஆண்டுகள் ஆனால் தமிழில் பேசும்படம் உருவாகி 100 ஆண்டுகள் நிறைவடைந்துவிடும்.
ஆரம்பகாலத்தில் நம்முடைய படங்கள் எல்லாமே படமாக்கப்பட்ட நாடகங்களாகவே இருந்தன. படத்தின் தொடக்கக்காட்சி கூட நாடக மேடைகளில் எப்படி திரைவிலகினதும் தொடங்குமோ அதுபோலவே வடிவமைக்கப்பட்டது.
அதே போல நாடகங்களில் எப்படி பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அப்படியே படங்களிலும் பாடல்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. ஒரு படத்தில் 60 பாடல்கள் வரை இடம்பெற்ற காலமெல்லாம் இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல உருமாறி தற்போது தமிழ் சினிமா பல புதிய உயரங்களைத் தொட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் படங்களில் வெற்றி சதவீதம் என்பது 2 சதவீதம்தான் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் ஆரம்பகாலத்தில் வெளியான படங்கள் எல்லாமே ஹிட்தான் என்ற நிலை இருந்தது. ஏனென்றால் அப்போது சினிமா என்பதே மக்களுக்கு ஒரு அதிசயப் பொருளாக இருந்தது. அதனால் அதன் உள்ளடக்கம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சினிமாவை சென்று மக்கள் பார்த்து வந்தனர்.
ஆனாலும் தமிழ் சினிமாவில் முதல் முதலாக ஒரு படம் தோல்விப் படமாக அமைந்தது என்றால் அது பிரகலாதா என்ற படம்தானாம். அந்த படம் தமிழ் சினிமாவின் 6ஆவது பேசும்படமாகும். 1939 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தொழில்நுட்பக் காரணங்களாலும், ஏற்கனவே மக்களுக்கு நன்கு தெரிந்த கதையென்பதாலும் மக்களை ஈர்க்கவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் வெளியானக் காலத்தில் இதே கதை நாடகமாகவும் நடத்தப்பட்டு வந்ததும் தோல்விக்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
அதுவரை வெளியான எந்த படமும் பொருளாதார ரீதியாக தோல்வியை சந்திக்காத நிலையில் பிரகலாதா தோல்விப் படம் என்ற தொடக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் டி ஆர் மகாலிங்கம், என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம் உள்ளிட்டவர்கள் நடிக்க பி என் ராவ் என்பவர் இயக்கியுள்ளார். எம் ஜி ஆர் இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாராம்.
