தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி என்று எடுத்துக் கொண்டால் அதில் ஜெமினிகணேசன் மற்றும் சாவித்திரி ஜோடிக்கு முக்கிய இடம் உண்டு. இவர்கள் இருவரும் இணைந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் இவர்களின் காதல் சம்பவங்கள் குறித்து இப்போதும் பல பிரபலங்கள் பேசிக் கொண்டிருக்கின்றன. அதனைப் போலவே நடிப்பு மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த சாவித்ரி, எம்ஜிஆர் மற்றும் சிவாஜி ஆகியோருடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்றைய தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் நடிகர்களின் பின்னால் செல்கிறார்கள் என்ற பேச்சு அதிகம் இருந்து வரும் நிலையில் கிளாசிக் சினிமாவில் தயாரிப்பாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதை இயக்குனர் மற்றும் நடிகர்கள் என அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதி இருந்தது.

ஒரு காட்சி சரியாக எடுக்கப்பட்டதா என்பது குறித்து தினமும் தான் தயாரிக்கும் படங்களின் காட்சிகளை ஏவி மெய்யப்ப செட்டியார் ஆய்வு செய்து கொண்டிருப்பார். அதன்படி களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை முதலில் ஒரு தெலுங்கு பட இயக்குனர் இயக்கியுள்ளார். ஜெமினிகணேசன் மற்றும் சாவித்திரி இணைந்து நடித்த இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் ஒரு விவசாயி மகளாக நடித்திருந்த சாவித்திரி ஒரு பாடலுக்கு நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

எப்போதுமே காட்சிக்கு தகுந்தது போல வீட்டிலிருந்தே மேக்கப் போட்டுக் கொண்டு வரும் சாவித்திரி அன்றைய தினம் ஒரு விவசாயி மகள் போல் இல்லாமல் பணக்கார பெண் போல தன்னிடம் இருக்கும் தங்கம் மற்றும் வைரம் உள்ளிட்டு அனைத்து நகைகளையும் அணிந்து கொண்டு வந்துள்ளார். இயக்குனரும் அதனை கண்டு கொள்ளாமல் அந்த பாடல் காட்சியை படமாக்கியுள்ளார். அன்று மாலை படமாக்கப்பட்ட காட்சிகளை பார்த்த ஏ வி எம் செட்டியார் இயக்குநரை அழைத்து கேட்டுள்ளார்.

இந்தப் பாடலில் அந்தப் பெண் யாருடைய மகள் என்று கேட்க, ஒரு விவசாயி மகள் என்று இயக்குனர் சொல்ல, இந்தப் பாடலில் அவர் ஒரு விவசாயி மகள் போல் ஒன்றும் தெரியவில்லையே அவ்வளவு ஆடம்பரமாக இருக்கிறதே என்று சொல்ல, இல்லை அந்தப் பெண் வெளியூரில் படித்து வந்தவர் என்று இயக்குனர் கூற, வெளியூரில் படிக்கும் விவசாயி மகள்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கிறார்களா என்று ஏவிஎம் செட்டியார் கேட்டுள்ளார். அதன் பிறகு இந்த பாடல் காட்சியை முற்றிலும் எடுத்து விடுங்கள் சாவித்திரியிடம் சொல்லுங்கள் எனக்கு இந்த காட்சி பிடிக்கவில்லை மீண்டும் இந்த காட்சியை படமாக்குங்கள் என்று கூறியுள்ளார். அதன் பிறகு அந்த பாடல் காட்சி மீண்டும் படமாக்கப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தப் பாடல் தான் ஆடாத மனமே என்ற பாடல் ஆகும்
