மதுரையைச் சேர்ந்த 31 வயதுப் பெண் ஒருவர், கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து தனது குழந்தையுடன் வசித்து வந்தார். கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய நிலையில், சென்னை போரூரில் உள்ள விடுதி ஒன்றில் பணியாற்றி வந்த அவர், மறுமணம் செய்து கொள்ள எண்ணித் திருமணத் தகவல் மையத்தில் தனது விவரங்களைப் பதிவு செய்திருந்தார். இதன் மூலம் அறிமுகமான தாம்பரம் செம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜீவ் என்பவர், தான் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மனிதவளத் துறை அதிகாரியாகப் பணிபுரிவதாகவும், பெற்றோர் இல்லாத விவாகரத்தானவர் என்றும் கூறி அப்பெண்ணின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.
தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பியும், ஆதரவாகப் பேசியும் அப்பெண்ணுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொண்ட ராஜீவ், சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் அவரை நேரில் சந்தித்துள்ளார். மேலும், கணவரிடமிருந்து விரைவில் விவாகரத்துப் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அப்பெண்ணிடமிருந்து பணம் மற்றும் நகைகளைப் பெற்றுக் கொண்டார். அதன்பிறகு தனது செல்போனை அணைத்துவிட்டு அவர் தலைமறைவானதால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் சிட்லப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், செம்பாக்கத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் குடும்பம் நடத்தி வந்த ராஜீவைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் இதே பாணியில் விவாகரத்து கோரும் பத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமண ஆசை காட்டி நகை, பணம் பறித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவை, காவலில் எடுத்து மேலும் தீவிர விசாரணை நடத்தக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
