கிரவுண்டிலும் நாங்கதான் கிங்… பாகிஸ்தானை அலறவிட்ட இந்திய வீராங்கனைகள்… 64 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி..!!

By Soundarya on ஆனி 15, 2026

Spread the love

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் (எட்ஜ்பாஸ்டன் மைதானம்) நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், இந்திய மகளிர் அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது.

இந்திய அணியின் இந்த வலுவான ஸ்கோருக்கு தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவின் சிறப்பான அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. அவர் 44 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். அவருடன் இணைந்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 36 ரன்களும், இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 17 பந்துகளில் 34 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

   

பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மாவின் சுழற்பந்து வீச்சில் நிலைகுலைந்தது. பாகிஸ்தான் அணியில் முனீபா அலி அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்த போதிலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக பந்துவீசிய தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகளையும், ஸ்ரீ சராணி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, பாகிஸ்தான் அணி 17 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.