பிரபல பாடகையான பி.சுசிலா தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் இடம் பெற்ற ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். 1950-களில் ஆரம்பித்து இப்போது வரை சுசிலா பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சுசிலா சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். ஒரு காலத்தில் சாவித்திரி, பத்மினி சரோஜாதேவி உள்ளிட்ட நடிகைகள் தங்களது படங்களில் இடம்பெறும் பாடல்களை கண்டிப்பாக சுசிலாதான் பாட வேண்டும் என கண்டிப்புடன் சொல்லி இருக்கின்றனர்.
சூப்பர் ஹிட் படங்களில் இடம்பெற்ற பாடலுக்கு தனது குரலால் உயிர் கொடுத்துள்ளார் பி சுசிலா. சுசிலா பின்னணி பாடகிக்கான முதல் தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பி.சுசிலா கடந்த 2021-ஆம் ஆண்டு ரிலீசான நாற்பது தென்றல் படத்தில் இடம் பெற்ற வண்ண வண்ண கோமளமே என்ற பாடலை பாடினார்.
இப்போது வயது மூப்பு காரணமாக பாடல் பாடவில்லை. இந்த நிலையில் சுசிலா திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். நடக்க முடியாமல் வந்த சுசிலாவோடு இரண்டு பேர் துணைக்கு வந்தனர். சுசிலா முடிகாணிக்கை செலுத்திவிட்டு சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர் நாராயண மந்திரம் பாடலை பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இது தொடர்பான புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.