சூர்யவம்சம் திரைப்படம் இப்படி ஒரு சாதனை படைத்திருக்கிறதா?… இனி எந்த படத்தாலும் அதை தாண்ட முடியாது!

By vinoth on மாசி 19, 2025

Spread the love

1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் விக்ரமன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து 90 களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.

அதன் பின்னர் அவர் இயக்கிய நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம், சூர்யவம்சம், பூவே உனக்காக, வானத்தைப் போல போன்ற சூப்பர் ஹிட் ஆகி வசூல் மழை பொழிந்தன. ஆனால் 2000 களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் ட்ரண்ட் மாற அவரின் மெலோ டிராமா கதைகள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

   

அதனால் கடைசியாக அவர் இயக்கிய படமாக மரியாதை படம் அமைந்தது. அந்த படம் படுதோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு அவர் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. அதனால் இப்போது சினிமாவில் இருந்து விலகி இடைவெளி எடுத்துக் கொண்டு அவரது மகனைக் கதாநாயகனாக்கியுள்ளார்.

   

விக்ரமன் படங்களின் பார்முலா என்னவென்று கூர்ந்து பார்த்தால் ஒரு எமோஷனலான கதைக்களம், அதைச் சுற்று நகைச்சுவை கதாபாத்திரங்கள் என நகர்த்திக் கொண்டே சென்று எமோஷனலாகக் கதையை முடிப்பார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த பார்முலா தேய்வழக்காக ஆனதால் அவரது படங்கள் ஓடவில்லை.

 

ஆனால் அந்த ட்ரண்ட் உச்சத்தில் இருந்தபோது அவர் எடுத்த ‘சூர்யவம்சம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தமிழ்நாட்டில் அதிகம் பேர் சென்று திரையரங்கில் பார்த்த படங்களில் ஒன்று சூர்யவம்சம். ஆனால் இந்த படம் திரையரங்கு தாண்டி படைத்த சாதனை பலரும் அறியாதது.

இதுபற்றி இயக்குனர் விக்ரமன் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதில் “தொலைக்காட்சிகளில் டி ஆர் பி யில் நம்பர் 1 என்றால் அது சூர்யவம்சம் திரைப்படம்தான்.  அந்த படத்தின் சாதனையை இதுவரை எந்த படமும் முறியடிக்கவில்லை.  யுடியூபில் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 70 கோடி பேர் அந்த படத்தைப் பார்த்துள்ளார்கள்” எனக் கூறியுள்ளார்.