தமிழ் சினிமாவில் தனக்கு முன்னோடி இல்லாத நடிகர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். மேடை நாடகத்தில் முடி சூடா மன்னனாக விளங்கியவர். 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார்.
அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது சிவாஜியோடு அவர் இணைந்து நடித்த ‘பாகப்பிரிவினை’ திரைப்படம்தான். அந்த படத்தில் சிங்கபூரான் என்ற வேடத்தில் கலக்கி இருப்பார் ராதா. ராதாவை நம் படத்தில் போட்டால் அவரே நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் என இரண்டையும் பார்த்துக்கொள்வார் என அவரை எல்லா படத்திலும் புக் பண்ண ஆரம்பித்தனர்.
எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக உருவாகி வந்த காலத்தில் கூட அவர்களுக்காக பணிந்து போகாதவர் எம் ஆர் ராதா. இருவரும அவரை மரியாதையோடு “அண்ணே” என்றுதான் அழைப்பார்கள்.

எம் ஆர் ராதா திரையில் எப்படி வெளிப்படுகிறாரோ, அதுவேதான் அவரின் நிஜ வாழ்க்கை குணாதியசமும். கேள்வி கேட்பவர்களுக்கு சரியான பதில்களைக் கொடுப்பார். கொஞ்சம் கிடுக்குப் பிடி கேள்விகளைக் கேட்டால் அவர்கள் பதில் சொல்ல முடியாத நெத்தியடி பதில்கள் வந்துவிழும்.
அப்படிதான் ஒருமுறை ஒரு பத்திரிக்கையாளர் ‘நீங்கள் முதலமைச்சர் ஆனால் என்ன செய்வீர்கள்?’ என்று அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு “நான் முதலமைச்சர் ஆனால் இதுபோல கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்களை எல்லாம் தூக்கி ஜெயிலில் போடுவேன்” என்று சொன்னாராம்.
