நடிகர் சூர்யா அரசியலுக்கு வரவிருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு, அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட வீரமணி என்பவர், சூர்யாவின் அரசியல் வருகை குறித்துப் பேசியது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள நற்பணி இயக்கம், கூட்டத்தில் வீரமணி பேசியது முற்றிலும் அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் மன்றத்தின் எந்தவொரு நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, தவறான விளக்கங்களுடன் பரப்பப்படும் இந்தத் தகவல்களை யாரும் நம்பவோ, பொருட்படுத்தவோ வேண்டாம் என்று ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் சூர்யாவுக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை என்பதை நற்பணி இயக்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் வாயிலாக மக்களுக்குத் தேவையான சமூகச் சேவைகளைத் தொடர்ந்து ஆற்றுவதே சூர்யாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் அனைத்தும் செயல் தலைவர் ராஜ் மற்றும் அமைப்பாளர் ராஜ் ஆகியோரின் மூலமாக மட்டுமே வெளியிடப்படும் என்பதால், அதனை மட்டுமே பின்பற்றுமாறு நற்பணி இயக்கம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.
