மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூரில், பிரசவ வலியால் துடித்த 22 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவரை, மருத்துவமனை ஊழியர்கள் கேட்டைத் திறக்காமல் நள்ளிரவில் சுமார் 30 நிமிடங்கள் வெளியே காத்திருக்க வைத்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரேம்சர் பகுதியில் உள்ள காந்தி நகர் துணை சுகாதார மையத்திற்கு வெளியே நிகழ்ந்த இந்த அலட்சியப் போக்கு குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி, பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் மன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் பைர்வாவின் மனைவி நிகிதா பைர்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் அவருக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பதற்றமடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை அருகில் உள்ள காந்தி நகர் துணை சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவர்களுக்குக் காத்திருந்தது பெரும் ஏமாற்றமும் அலைக்கழிப்பும் மட்டுமே.
அவசரச் சூழலிலும் மருத்துவமனையின் பிரதான வாயில் பூட்டப்பட்டிருந்ததால், நிகிதாவின் குடும்பத்தினர் சுமார் அரை மணி நேரமாக கேட்டைத் தட்டி, ஊழியர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். எனினும், உள்ளே இருந்த ஊழியர்கள் எவரும் எழுந்து வந்து கதவைத் திறக்கவில்லை. வலியால் துடித்த தன் சகோதரியின் நிலையைக் கண்டு விரக்தியடைந்த அவரது சகோதரர், “கடந்த 30 நிமிடங்களாகக் கதவைத் தட்டியும் யாரும் பதிலளிக்கவில்லை” என்று வேதனையோடு கூறும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. வேறு வழியின்றி குடும்பத்தினரே கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.
அவ்வாறு உள்ளே நுழைந்த பிறகும், அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள் அப்பெண்ணுக்கு உடனடி சிகிச்சை அளிக்க முன்வரவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் நிலைமை மோசமடைவதைக் உணர்ந்த அவர்கள், உடனடியாக நிகிதாவை ஒரு மோட்டார் சைக்கிளில் அமரவைத்து, ஷியோபூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு அவருக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஒரு பெண் குழந்தையைப் பாதுகாப்பாகப் பெற்றெடுத்தார்.
தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களின் அவசரக்கால செயல்பாடுகள் குறித்துப் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாகக் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, அலட்சியமாகச் செயல்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
