மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்த அந்தீஸ்வரன் – ஆனந்த லட்சுமி தம்பதியின் 16 வயது மகள் ஜீவிதா. இவர் அலங்காநல்லூர் அருகேயுள்ள கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், படிப்பில் சரிவர கவனம் செலுத்தவில்லை என ஆசிரியை ஒருவர் அவரைத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாணவி ஜீவிதா, தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன்பாக இது குறித்து ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த சமயநல்லூர் காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, மாணவியின் தற்கொலைக்குக் காரணமான ஆசிரியை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு முன்பாகக் கூடி திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து அவர்களைச் சமரசம் செய்த பின்னரே அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
