அட்ராசக்க..! நேரடியா பஸ்ஸையே தூக்கிய வாலிபர்கள்… சினிமா பாணியில் பஸ் திருட்டு… CCTV காட்சிகளால் சிக்கிய 21 வயது இளைஞர்…!!

By Gayathri on ஆவணி 28, 2026

Spread the love

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட கொயிலாண்டி பேருந்து நிலையத்தில், இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்தை மூன்று இளைஞர்கள் நள்ளிரவில் திருடிச் சென்றுள்ளனர். அங்கிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் வரை வாகனத்தை ஓட்டிச் சென்ற அவர்கள், பொயில்காவு பைபாஸ் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் திரும்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்துள்ளனர். இதனால் பேருந்து சாலையோர சேற்றில் ஆழமாகச் சிக்கியதுடன், அருகிலிருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீதும் மோதி நின்றது. வாகனத்தை சேற்றிலிருந்து மீட்டெடுக்க அவர்கள் செய்த முயற்சிகள் பலனளிக்காததால், மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் உள்ளே இருந்த அன்றைய வசூல் பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மூவரும் தப்பிச் சென்றுவிட்டனர்.

மறுநாள் காலை விபத்துக்குள்ளான நிலையில் பேருந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசாருக்கும் வாகன உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் இரண்டு கிரேன்கள் வரவழைக்கப்பட்டு பேருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கொயிலாண்டி காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில், பந்தலாயினி பகுதியைச் சேர்ந்த அபினவ் என்ற இளைஞரை கைது செய்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்ற இருவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.