கேரள மாநிலம் ஆலப்புழாவில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆலப்புழா புன்னபுரா பகுதியைச் சேர்ந்த உஷா ஜோசப் (51) என்ற பெண், கடந்த 2021-ஆம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அன்று முதல் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
வயிற்று வலிக்காக அவர் பலமுறை அதே மருத்துவமனையை அணுகியபோது, அவருக்கு சிறுநீரகத் தொற்று இருப்பதாகக் கூறி மருத்துவர்கள் அலட்சியமாக மாத்திரைகளை வழங்கியுள்ளனர். வலி குறையாததால் அவர் தொடர்ந்து வலி நிவாரணிகளை உட்கொண்டு வந்த நிலையில், அவருக்குச் சிறுநீர் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியுள்ளது. இதனால் அச்சமடைந்த உஷா, ஒரு தனியார் சிறுநீரக மருத்துவரை அணுகி எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, அவரது வயிற்றில் 10 சென்டிமீட்டர் நீளமுள்ள அறுவை சிகிச்சை கத்தரிக்கோல் (Artery forceps) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த எக்ஸ்ரே ஆதாரத்துடன் உஷா மீண்டும் அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, மருத்துவர்கள் தங்கள் தவறை உணர்ந்து பதற்றமடைந்துள்ளனர். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும், தாங்களே மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கத்தரிக்கோலை எடுத்துவிடுவதாகவும் கூறி சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால், அரசு மருத்துவர்கள் மீது நம்பிக்கை இழந்த அந்தப் பெண், கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்ததோடு, இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இந்த விவகாரம் குறித்து நிபுணர் குழு மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். தவறு செய்த மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெண்ணின் சிகிச்சைக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் இத்தகைய பொறுப்பற்ற செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அரசு மருத்துவமனைகள் மீதான அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
