“மனசாட்சியே இல்லையா?”… ரத்த வெள்ளத்தில் துடித்த குழந்தையைத் திருப்பி அனுப்பிய மருத்துவமனைகள்.. உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு…!!

By Rajeshwari on சித்திரை 11, 2026

Spread the love

உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அம்மாநில காவல்துறையின் மெத்தனப் போக்கை உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. சிறுமியின் பிறப்புறுப்பில் மழுங்கிய பொருள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிந்த பின்னரும், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கைப் பதிவு செய்யாதது நீதிபதிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் காவல்துறையின் அணுகுமுறை “உணர்ச்சியற்றது” என்று விமர்சித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, காசியாபாத் காவல் ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் ஆகியோர் ஏப்ரல் 13 அன்று அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

   

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறுமி உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள் இருந்தும் காவல்துறையினர் போதிய அக்கறை காட்டவில்லை என்றும், வழக்கை வாபஸ் பெறச் சொல்லி தந்தை மிரட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், இரத்தப்போக்கால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை அனுமதிக்க மறுத்த இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

   

மேலும் நீதியை உறுதி செய்யும் பொருட்டு, இந்த வழக்கை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அல்லது மத்திய புலனாய்வு முகமை விசாரிக்க வாய்ப்புள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எவ்வித நெருக்கடியும் அளிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.