முடிவுக்கு வருகிறதா வேலுமணியின் கொங்கு சாம்ராஜ்யம்?… எஸ்.பி.வேலுமணிக்கு மாநில பதவி… ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி…!

By Visaka on ஆனி 28, 2026

Spread the love

சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது த.வெ.க. அரசிற்கு ஆதரவளித்த விவகாரத்தில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. குறிப்பாக, கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து எஸ்.பி. வேலுமணி நீக்கப்பட்டு, அப்பொறுப்பு முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமிக்கு வழங்கப்பட்டது. இதனிடையே, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் மீண்டும் கட்சியில் இணைந்த போதிலும், அவருக்கு பழைய மாவட்டச் செயலாளர் பதவி உடனடியாக வழங்கப்படாமல் இருந்து வந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சூழ்நிலையில், மீண்டும் கட்சியில் இணைந்தவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய பதவிகளை அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில், எஸ்.பி. வேலுமணிக்கு மாநில அளவிலான ‘அதிமுக துணை பொதுச்செயலாளர்’ பதவி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவரின் பழைய கோட்டையான கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தற்போது ‘கோவை புறநகர் மத்திய மாவட்டம்’ மற்றும் ‘புறநகர் தெற்கு மாவட்டம்’ என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய மாவட்டச் செயலாளராக செ.ம. வேலுசாமியும்; பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

   

எஸ்.பி. வேலுமணிக்கு மாநில அளவிலான உயர் பதவி கொடுக்கப்பட்டிருந்தாலும், அது உண்மையில் அதிகாரமில்லாத பதவி என்றும், இதன் மூலம் கொங்கு மண்டலத்தில் அவருக்கிருந்த தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், வேலுமணிக்கு எதிராக அரசியல் செய்து வரும் செ.ம. வேலுசாமி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருக்கு மாவட்டப் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பது வேலுமணி தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதிலும் குறிப்பாக, வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் பகுதிக்கு செ.ம. வேலுசாமி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது, எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.