தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 8-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இத்தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலையுடன், பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த ரூ. 3,000 ரொக்கப்பணமும் சேர்த்து வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பரிசுத் தொகுப்பு விநியோகப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், வழக்கமாக விடுமுறை நாளான ஜனவரி 9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் முழுநேரம் செயல்படும் என்று உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. அன்றைய பணி நாளுக்கு ஈடாக, பிப்ரவரி 7-ம் தேதி சனிக்கிழமை அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
