கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் பெங்களூரில் வசித்து வருகின்றார். இவர் போலீசில் அளித்துள்ள புகார் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த புகாரில், சித்திரதுர்கா டவுன் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் கடிலிங்கப்பா கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இன்ஸ்டாகிராம் மூலமாக எனக்கு பழக்கமானார். இருவரும் நட்பாக பழகிய நிலையில் என்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அவர் என்னிடம் கூறினார். பிறகு என்னை கட்டாயப்படுத்தியவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். பிறகு ஒரு கட்டத்தில் அவர் என்னிடம் பேசுவதை முழுவதுமாக தவிர்த்து வந்தார்.
மேலும் அவருடைய செல்போனை தொடர்பு கொள்ள முயற்சித்த போது ஸ்விட்ச் ஆஃப் என வந்தது. தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு அவர் instagram-ல் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். என்னை திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து திருமணத்திற்கு மறுப்பதுடன் ஜாதி சொல்லி திட்டி வருகின்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் புகாரில் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அவரை மகளிர் போலீசார் கைது செய்துள்ள நிலையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
