நெல்லை வீரவநல்லூரில் தனியார் பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளி வேன்களுக்கு தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் சபரி கண்ணன் கடந்த ஜூலை நான்காம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மாணவன் உயிரிழந்த நிலையில் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குள் நுழைந்து வேன்களுக்கு தீ வைத்தது மட்டுமல்லாமல் மற்ற பொருள்களையும் சூறையாடினர். இதனைத் தொடர்ந்து பதட்டத்தை தணிக்க வீரவநல்லூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தற்போது வரை பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
