கீழே விழுந்தால் மரணம் நிச்சயம்… 12-வது மாடி உயரத்தில் தவித்த வாயில்லா ஜீவன்… ஒரு சிறு தவறு நடந்திருந்தாலும் விபரீதம்… நெஞ்சைப் பதறவைக்கும் வைரல் வீடியோ…!!

By Gayathri on ஆவணி 28, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சோஹ்னா சாலையில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் கட்டிடம் ஒன்றின் 12-வது மாடி விளிம்பில் தெருநாய் ஒன்று சிக்கிக்கொண்ட சம்பவம் சமீபத்தில் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. புதன்கிழமை காலையில், அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் வசிக்கும் நபர் ஒருவர், இந்த நாய் ஆபத்தான நிலையில் மாடியின் விளிம்பில் நின்றுகொண்டிருப்பதைக் கவனித்துள்ளார். எந்த நேரத்திலும் கீழே விழுந்துவிடக்கூடிய திக் திக் சூழ்நிலையில் அந்த வாயில்லா ஜீவன் தவித்துக்கொண்டிருந்தது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அந்த நபர், சற்றும் தாமதிக்காமல் அவசர உதவி எண்ணான 112-க்குத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்த வெறும் 30 நிமிடங்களுக்குள் ஹரியானா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மனிதர்களைப் பார்த்தால் நாய் பயந்துபோய் தவறுதலாகக் கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக, எவ்வித சத்தமும் எழுப்பாமல் மிகவும் கவனமாகச் செயல்பட்டு அந்த நாயைப் பத்திரமாக மீட்டனர்.

   

பத்திரமாக மீட்கப்பட்ட பிறகு, அந்த நாய் எவ்வித காயமும் இன்றி மிகவும் மகிழ்ச்சியாக வாலை ஆட்டிக்கொண்டே சென்றதைக் காண முடிந்தது. நெட்டிசன்களால் ‘டோகேஷ் பாய்’ என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த நாயின் மீட்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. சரியான நேரத்தில் தகவல் கொடுத்த நபரையும், துரிதமாகச் செயல்பட்ட மீட்புப் படையினரையும் இணையவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இருப்பினும், இவ்வளவு உயரமான 12-வது மாடிக்கு அந்த நாய் எப்படிச் சென்றது என்பது பலருக்கும் விடைதெரியாத மர்மமாகவே உள்ளது.