ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் எடுத்துள்ள அதிரடி முடிவு, உலக கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஈரான் தலைவர்களுக்கும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தரப்பிற்கும் இடையே நிலவிய கருத்து மோதல்கள், ஓரளவு சீரடைந்திருந்த போக்குவரத்து பாதையை மீண்டும் முடக்க நிலைக்கு தள்ளியுள்ளது. இன்று மட்டும் ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற 20 வணிகக் கப்பல்களை ஈரான் திருப்பி அனுப்பியுள்ளது. அதே வேளையில், அமெரிக்க கடற்படையின் கடுமையான முற்றுகை காரணமாக மேலும் 23 கப்பல்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இதன் மூலம் இரு நாடுகளும் சரக்கு போக்குவரத்தை முடக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருவது உறுதியாகியுள்ளது.
முன்னதாக, ஹார்முஸ் நீரிணை எவ்விதத் தடையுமின்றி வணிகக் கப்பல்களின் போக்குவரத்திற்கு முழுமையாகத் திறக்கப்படும் என்று ஈரான் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 13 சதவீதம் வரை சரிந்தது. இருப்பினும், ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தை முழுமையாக முடியும் வரை அமெரிக்க கடற்படையின் முடக்கம் தொடரும் என டிரம்ப் அறிவித்தது நிலைமையை தலைகீழாக மாற்றியது. மேலும், எதிர்வரும் புதன்கிழமைக்குள் ஒரு சுமுகமான முடிவை எட்டவில்லை எனில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாது என்றும், மீண்டும் தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கையை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு கவுன்சில் கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்காவின் முடக்கம் நீடித்தால், ஹார்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்கப்போவதில்லை என்றும், ஈரான் படைகளின் கட்டுப்பாட்டில் நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே சில கப்பல்கள் அனுமதிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், போர் முழுமையாக முடிந்து நிலையான அமைதி ஏற்படும் வரை இந்த முக்கிய நீர்வழிப்பாதையின் கட்டுப்பாடு தங்களது கரங்களிலேயே இருக்கும் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் இந்த இழுபறி நிலையால், ஓமன் அருகே எண்ணெய் டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் சர்வதேச கப்பல் நிறுவனங்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் பல கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளன. உலகின் முக்கிய எரிசக்தி போக்குவரத்துப் பாதையாகக் கருதப்படும் இப்பகுதியில் கடந்த 50 நாட்களாகத் தொடரும் இந்த அமைதியற்ற சூழல், சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
