தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது.
அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். அதிலிருந்து இப்போது வரை தமிழ் சினிமாவின் மாஸ் மகாராஜாவாக இருக்கிறார். தற்போது தன்னுடைய 73 வயதிலும் தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் ஆகியோருக்கு போட்டியாக களத்தில் நிற்கிறார்.
90 களை ரஜினிகாந்த் அவரது சினிமா வாழ்வின் உச்சத்தில் இருந்த நாட்கள் என சொல்லலாம். அந்தளவுக்கு மாஸ் ஹிட் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் ஒன்றுதான் 92 ஆம் ஆண்டு வெளியான அண்ணாமலைத் திரைப்படம். அந்த படத்துக்கு முதலில் இயக்குனராக ஒப்பந்தம் ஆனவர் வசந்த். ஆனால் ரஜினியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலக சுரேஷ் கிருஷ்ணா அந்த படத்தை இயக்கினார். அந்த படம் ரஜினியின் மாஸ் உச்சத்தைத் தொட்ட படங்களில் ஒன்றாக அமைந்தது.

படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களுமே ஹிட்டாகின. தேவா இசையில் வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதினார். இந்த படத்தில் இடம்பெற்ற கொண்டையில் தாழம்பூ பாடலில் ரஜினி மற்றும் குஷ்பூ ஆகியோரின் பெயர்கள் வரும்படி வைத்து எழுதினார்.
இந்த பாடல் பற்றி தன்னுடைய நினைவுகளை சமீபத்தில் பகிர்ந்துகொண்ட வைரமுத்து “முதலில் அந்த பாடலில் குஷ்பூவின் பெயர் மட்டும் வரும்படிதான் எழுதி இருந்தேன். அதைக் கேட்டு மகிழ்ந்த ரஜினி ‘அப்படியென்றால் என் பெயரும் பாடலில் வருமா?” என்று கேட்டார். அதன் பின்னர்தான் ரஜினி என்ற வார்த்தையும் வரும்படி அந்த பாடலை எழுதினேன்” எனக் கூறியுள்ளார்.
