தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. நாடக உலகில் சிவாஜி, எம் ஜி ஆருக்கெல்லாம் சீனியரான ராதா, 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார். ஆனாலும் 60 கள் மற்றும் 70 களில் முன்னணி நடிகராகவும் வந்தார்.
அவருக்குப் பிறகு அவரின் வாரிசுகள் பலர் தமிழ் சினிமாவில் இன்றளவும் நடித்து வருகின்றனர். அவரின் மகன்களில் ஒருவரான ராதாரவி கே பாலச்சந்தரின் மன்மத லீலை திரைப்படத்தின் மூலம் நடிகரானார். தந்தை வழியைப் பின்பற்றி குணச்சித்திரம் மற்றும் வில்லன் என அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் நடித்துக் கலக்கினார். 80 களில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த தற்போது வில்லன், குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை எனக் கலக்கி வருகிறார்.

ராதாரவி நடிகர் மட்டுமில்லாமல் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் டப்பிங் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். அவரின் தனித்துவமான குரல் வெளியே தெரியாமல் அவர் டப்பிங் பேசிய கதாபாத்திரங்களில் ஒன்று ஆடுகளம் படத்தின் பேட்டக்காரன் கதாபாத்திரம். அந்த கதாபாத்திரம் கொண்டாடப்பட்டதற்கு ராதாரவியின் குரலும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை.
இந்த படத்த்க்காக டப்பிங் பேசிய அனுபவத்தைப் பகிர்ந்துள்ள அவர் “வெற்றிமாறன் நல்ல இயக்குனர். அந்த டப்பிங்கின் போதுதான் அவரோடு எனக்குப் பழக்கம். டப்பிங்கில் கரெக்ஷன் சொல்லும்போது கூட அவர் பணிவாக பேசி வேலை வாங்குவார். என்னிடம் கரெக்ஷன் சொல்வது பெரிசில்லை. ஆனால் அதில் என்ன தவறு நடந்தது என சொல்லவேண்டும். அதை சரியாக சொல்லி வேலை வாங்குவார் வெற்றிமாறன்” எனக் கூறியுள்ளார்.
