குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்… இனி இஷ்டத்துக்கு சரக்கு வாங்கமுடியாது… டாஸ்மாக் வெளியிட்ட அதிரடி உத்தரவு…!

By Nanthini on பங்குனி 22, 2026

Spread the love

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், டாஸ்மாக் மது விற்பனை மற்றும் இருப்பு மீது தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தலின் போது வாக்காளர்களுக்கு மதுபானம் விநியோகிப்பதைத் தடுக்கவும், முறைகேடுகள் இன்றி அமைதியான முறையில் தேர்தலை நடத்தவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 4,800 டாஸ்மாக் கடைகளும் இந்த புதிய உத்தரவுகளைப் பின்பற்றுகிறதா என்பதை அதிகாரிகள் தினசரி கண்காணித்து வருகின்றனர்.

இந்த புதிய கட்டுப்பாடுகளின்படி, அரசியல் கட்சியினர் வழங்கும் டோக்கன்கள் அல்லது கூப்பன்களுக்கு மதுபானம் வழங்கக் கூடாது என்று கறாராக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், மதுபான இருப்பு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்றும், மாத விற்பனை 30 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்றும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அளவைத் தாண்டி மதுபானம் இருப்பு வைக்கப்பட்டால் அது ‘பதுக்கல்’ என்றும், கூடுதல் விற்பனை ‘மொத்த விற்பனை’ என்றும் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

   

மதுக்கடைகள் மட்டுமின்றி, அவற்றுடன் இணைந்த பார்களுக்கும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பார்கள் இரவு 10 மணிக்கு மேல் செயல்படக் கூடாது என்றும், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகத் திறக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் பார்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, வைப்புத்தொகையும் பறிமுதல் செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட மேலாளர்கள் மற்றும் சூப்பர்வைசர்களுடன் தொடர் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, விதிமீறல்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டு வருகிறது.

   

தேர்தல் நேரத்தில் மதுபானங்களை மொத்தமாக வாங்கி வாக்காளர்களைக் கவர நினைக்கும் நபர்களுக்கும், அதிக அளவில் மது அருந்தத் திட்டமிடும் நபர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பெரும் ‘செக்’ ஆக அமைந்துள்ளது. இருப்பினும், மொத்த விற்பனைக்கான தெளிவான வரையறை குறித்து தங்களுக்கு முழுமையான விளக்கம் அளிக்கப்படவில்லை என்று சில டாஸ்மாக் பணியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், மது விற்பனை மீதான இந்த கட்டுப்பாடு தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.