சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் பவர் காலி?… சென்னையில் உதயநிதிக்காக ஸ்டாலின் போட்ட ரகசிய ஸ்கெட்ச்… உளவுத்துறை அறிக்கையால் அலறிய அறிவாலயம்…!

By Nanthini on ஆனி 13, 2026

Spread the love

திமுகவில் இதுவரை இல்லாத வகையிலான ஒரு பிரம்மாண்ட உட்கட்சி கட்டமைப்பு மாற்றத்திற்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தயாராகி வருகிறார். கட்சிக்குள் புதிய உத்வேகத்தைக் கொண்டுவரவும், காலத்திற்கேற்ப ‘இளம் ரத்தம்’ பாய்ச்சவும் அவர் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இதன் முக்கியப் பகுதியாக, தற்போது திமுகவில் 72 ஆக இருக்கும் அமைப்பு ரீதியான மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 115 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் அதற்குப் பிந்தைய கள நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்த பின்னரே, இந்த அதிரடி முடிவை கட்சித் தலைமை கையில் எடுத்துள்ளது.

சமீபத்திய தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்த விசாரணைக் குழுவின் அறிக்கை, கட்சியில் வாரிசுகளே பெரும்பாலும் அமைச்சர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வலம் வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், அரசியல் அதிகாரம் பெறத் துடிக்கும் இளைஞர்கள் பலரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நோக்கி ஈர்க்கப்படுவதை அறிவாலயம் உணர்ந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சீனியர் மாவட்டச் செயலாளர்களின் அதிகாரத்தைக் குறைத்து, புதிதாக உருவாக்கப்படும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் சுமார் 60 சதவீதத்தை இளைஞர்களுக்கு வழங்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். சில சீனியர்கள் இதற்கு முட்டுக்கட்டை போட்டாலும், தலைமை அதைப்பற்றிக் கவலைப்படாமல் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தியுள்ளது.

   

இந்த அதிரடி மாற்றங்களின் ஒரு பகுதியாக, சுமார் 34 மாவட்டச் செயலாளர்கள் வரை பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாகச் சென்னையில், அதிக தொகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோரின் பவர் கணிசமாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. அதிலும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் அடைந்த தோல்வியால், வடசென்னையில் சேகர்பாபுவுக்கு அதிக அதிகாரத்தைக் கொடுக்கக் கூடாது என்பதில் திமுக மேலிடம் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இதனால் சில முக்கிய மாவட்டச் செயலாளர்களிடம் கட்சித் தலைவர் நேரடியாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

   

சென்னையைப் பொறுத்தவரை, சமூக நீதி அடிப்படையில் தலித் மற்றும் மீனவ சமூகங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை வழங்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் ஆர்.டி.சேகர், பரந்தாமன், கே.பி.சங்கர், அரவிந்த் ரமேஷ், பிரபாகர் ராஜா, சிற்றரசு போன்ற தலைவர்கள் புதிய பவர் செண்டர்களாக உருவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒட்டுமொத்தப் புனரமைப்பின் மூலமாகச் சென்னையில் உதயநிதி ஸ்டாலினின் கை ஓங்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த அதிரடி மாற்றங்களுக்கான முதல்கட்டப் பணிகள் ஜூன் மாத இறுதியிலேயே அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.