“நீங்க சொல்லுங்க… நான் கேட்கிறேன்.. திமுகவில் இனி உங்க ஆட்சி தான்”… தமிழக அரசியலில் ஸ்டாலின் கையில் எடுத்த புதிய அஸ்திரம்…!!!

By Muthu Mani on வைகாசி 15, 2026

Spread the love

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்துள்ள பெரும் பின்னடைவை ஏற்றுக்கொண்டு, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்களிடம் உரையாற்றிய அவர், இந்தத் தேர்தல் முடிவுகள் தாம் எதிர்பார்த்த ஒன்று அல்ல என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். தோல்விக்கு யாரையும் பழிபோட விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஒரு கட்சியின் தலைவராக இந்தத் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் தானே ஏற்பதாக அறிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் பரபரப்புகளையும், மக்களின் மனநிலையையும் தாம் உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தெரிவித்த ஸ்டாலின், தோல்வியைக் கண்டு முடங்கிவிடப் போவதில்லை என்றும் கூறினார். வெற்றி கிடைக்கும்போது தனக்குக் கிடைக்கும் பெருமையைப் போலவே, தோல்வியையும் ஒரு தலைவனாகத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதே இலக்கணம் என்று குறிப்பிட்ட அவர், இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு வர உடனடியாக மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

   

கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், நவீன காலத்திற்கு ஏற்ப அணுகுமுறைகளை மாற்றியமைக்கவும் பொதுமக்களின் ஆலோசனைகள் தேவை என்று அவர் கேட்டுக்கொண்டார். இதற்காக ‘உடன்பிறப்பின் குரல்’ என்ற புதிய இணையதளத்தைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தார். மக்கள் தங்கள் கருத்துக்களைச் சுதந்தரமாகத் தெரிவிக்க வேண்டும் என்றும், தேர்தல் முடிவுகளுக்கான காரணங்கள் மற்றும் திமுக மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து அதில் பகிரலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

   

இந்த இணையதளத்தில் குரல் பதிவு மூலமாகவோ, நேரடியாக தட்டச்சு செய்தோ அல்லது கடிதங்களை புகைப்படமாகப் பதிவேற்றியோ கருத்துக்களைப் பகிரும் வசதி செய்யப்பட்டுள்ளது. மக்களின் ஒவ்வொரு கருத்தையும் தாம் நேரில் படித்துப் பரிசீலிக்க உள்ளதாகவும், அதன் அடிப்படையில் கட்சி நிர்வாகத்தில் அனைத்து நிலைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார். அடுத்த நூறாண்டுகளுக்கு இந்த இயக்கம் மக்களுக்காக உயிர்ப்போடு இயங்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறி, “உடன்பிறப்பே நீங்கள் சொல்லுங்கள், நான் கேட்கிறேன்” எனத் தனது உரையை அவர் நிறைவு செய்தார்.