“இந்த பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்”…. அலறும் திருச்சி… கொந்தளித்த ஸ்டாலின்…. தவெக அரசுக்கு ஓபன் சவால்…!

By Nanthini on புரட்டாதி 5, 2026

Spread the love

திமுகவின் முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளது. சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அவரது இல்லங்கள் உட்பட சுமார் 19 இடங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், எதிர்க்கட்சியின் முக்கிய முகமாகத் திகழும் கே.என்.நேருவின் இடங்களில் நடத்தப்படும் இந்தச் சோதனை, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.

முந்தைய ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த கே.என்.நேரு, அப்பகுதியில் பணி நியமனங்கள் வழங்கியதில் முறைகேடுகள் செய்து ரூ.800 கோடிக்கும் அதிகமாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தில் ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், அதன் தொடர்ச்சியாகவே தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இந்த அதிரடி நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சோதனை குறித்த அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதுவும் அதிகாரிகளால் இதுவரை விரிவாக வெளியிடப்படவில்லை.

   

இந்த நடவடிக்கை குறித்து தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டது எனத் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலிலும், சட்டமன்றக் கூட்டத்தொடர் இயங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் இத்தகைய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க குதிரை பேரம் நடத்தியவர்கள், இப்போது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இத்தகைய சோதனைகளை நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

   

மேலும் தனது சமூக வலைதளப் பதிவில், “கே.என்.நேருவும் திமுகவும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை; சட்டத்தின் வழியில் நின்று அனைத்துப் பழிவாங்கல் நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு வெல்வோம்” என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள நேருவின் இல்லத்தின் முன் திரண்ட திமுக தொண்டர்கள் மற்றும் தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எழும் விமர்சனங்களால் மாநில அரசியலில் களம் சூடேறியுள்ளது.