கோவையில் இன்று (பிப். 27, 2026) நடைபெற்ற திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் அபாரமான செயல்பாட்டுத் திறன் மற்றும் தேர்தல் வியூகங்கள் அவரது அரசியல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவதோடு, அவர்களின் தூக்கத்தையும் கெடுத்து வருவதாகவும், எத்தனை மிரட்டல்கள் மற்றும் நெருக்கடிகள் வந்தாலும் அதற்கு அஞ்சாமல், செந்தில் பாலாஜி கட்சிப்பணியில் உறுதியுடன் நிற்பதாக முதல்வர் அவரைப் பாராட்டிப் பேசினார்.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி குறைந்தது 2.5 கோடி வாக்குகளைப் பெற்று, 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முதல்வர் நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை எட்ட, ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவரும் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று, பொதுமக்களிடம் அன்பாகவும் நட்பாகவும் பேசி திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
