சீனியர்களுக்கு செக்?…. 15 நாட்கள் கெடு விதித்த ஸ்டாலின்…. திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு… பரபரப்பின் உச்சத்தில் அறிவாலயம்….!

By Nanthini on ஆவணி 28, 2026

Spread the love

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று 8 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அவர் 9-ஆவது ஆண்டில் பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் நாளில் கழக உடன்பிறப்புகளால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், “மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” என்ற முழக்கத்துடன் கட்சிப் பணிகளைத் தொடர்ந்தார். காலத்தின் மாற்றத்திற்கு ஏற்பக் கட்சியைக் கட்டுக் கோப்பாக நடத்தி வந்ததன் விளைவாக, தொடர்ந்து பல தேர்தல் வெற்றிகளைப் பெற்றுத் தந்து, திமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தார்.

கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், கட்சியின் வளர்ச்சிக்காகவும் வரவிருக்கும் தேர்தல் வெற்றிகளை இலக்காகக் கொண்டும் திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஸ்டாலின் அறிவித்துள்ளார். அமைப்பு ரீதியாக 77 ஆக இருந்த திமுகவின் மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை தற்போது 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தலைநகர் சென்னை அதிகபட்சமாக 10 மாவட்டங்களாகவும், மதுரை, கோவை, சேலம் ஆகியவை தலா 5 மாவட்டங்களாகவும், ஈரோடு, திருச்சி, தஞ்சை உள்ளிட்டவை தலா 4 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

   

இந்த மறுசீரமைப்பு குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “கழக நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்திற்கும் மறுசீரமைப்புக்கும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் முழுமையாகத் துணைநிற்க வேண்டும்; உங்களின் அளப்பரிய துணையோடு மீண்டும் நம் கழகத்தை அனைத்துக் களங்களிலும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன்” என்று மிகுந்த நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார். தலைவரின் இந்த அறிவிப்பு திமுக தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

   

மேலும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 110 மாவட்டக் கழகங்களிலும் தற்போதுள்ள மாவட்டச் செயலாளர்கள், தலைமை வழிகாட்டுதலின்படி 15 நாட்களுக்குள் மாவட்டச் செயற்குழுவைக் கூட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நகரம், ஒன்றியம், பகுதி, பேரூர் மற்றும் கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்கி, தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி புதிய நிர்வாக அமைப்புகளை உடனே உருவாக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் கட்டளையிட்டுள்ளார்.