அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…. நயினார் நாகேந்திரனை நேரில் பார்த்த ஸ்டாலின்…. சட்டென கை குலுக்கி செஞ்ச காரியம்…. ஸ்தம்பித்து அரசியல் களம்….!

By Nanthini on ஆவணி 28, 2026

Spread the love

சென்னையில் நடைபெற்ற ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் இல்லத் திருமண விழாவில், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த விழாவில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் பங்கேற்றார். எதிர்பாராத விதமாக இருவரும் எதிரெதிரே சந்திக்க நேர்ந்தபோது, எவ்விதத் தயக்கமும் இன்றி பரஸ்பரம் கைகளைக் குலுக்கி, புன்னகையோடு நலம் விசாரித்துக் கொண்டனர். மாற்று முகாமில் கடுமையாக விமர்சித்துக்கொண்டாலும், நேரில் சந்திக்கும்போது காட்டிய இந்த அக்மார்க் நட்பு மற்றும் பரஸ்பர மரியாதை, தற்கால அரசியல் சூழலில் மிகச் சிறந்த அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பொதுவெளியில் அரசியல் எதிரிகளாகக் களம்கண்டாலும், தனிப்பட்ட முறையில் பிற தலைவர்களிடம் அன்பு காட்டி நட்பு பாராட்டுவது மு.க.ஸ்டாலினின் வழக்கமான பாணியாகும். இதற்கு முன்பாகக் கடந்த ஜூன் மாதம் புதுவையில் நடைபெற்ற இயக்குநர் கவுதமன் மகள் திருமண விழாவிலும் இது போன்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது. திமுக அரசைத் தொடர்ச்சியாகக் கடுமையாக விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை அங்கே சந்தித்த மு.க.ஸ்டாலின், எவ்விதக் காழ்ப்புணர்ச்சியும் இன்றி அவரோடு இயல்பாக நலம் விசாரித்துப் பேசினார். கருத்தியல் ரீதியாக எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், தனிப்பட்ட சந்திப்புகளில் தலைவர்கள் காட்டும் இந்தப் பண்பாடு தமிழக அரசியலின் உயர் தரத்தைப் பிரதிபலிக்கிறது.

   

முன்னதாக, அதிமுக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த மனோஜ் பாண்டியன், உள்கட்சிப் பூசல்களின் போது ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். பின்னணிச் சூழல்களால் அந்த அணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அவருக்கு, நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் ஆலங்குளம் தொகுதியிலேயே போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் 69,170 வாக்குகள் பெற்ற மனோஜ் பாண்டியன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் (61,372 வாக்குகள்) மற்றும் தவெக வேட்பாளர் விபின் சக்கரவர்த்தி (60,684 வாக்குகள்) ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி அபார வெற்றி பெற்றுத் தனது தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.