பெரியாரின் தீவிர தொண்டரான எஸ் எஸ் ஆர் திமுகவில் இணைந்து 1962 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தனது தொகுதியான தேனியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம் எல் ஏ வாக சட்டமன்றம் சென்றார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் இருந்து எம் எல் ஏ ஆன முதல் நடிகர் என்ற பெருமையைப் பெற்றார்.
நாடகங்களில் நடித்து பிரபலமான எஸ்.எஸ்.ஆர், சிவாஜி கணேசன் அறிமுகமான ’பராசக்தி’ என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பிச்சைக்காரன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அதன் பின்னர் அவரை பிரபல நடிகராக்கியது ரத்தக்கண்ணீர் திரைப்படம்தான். அதன் பின்னர் கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்தார்.
கணீர் குரலுக்கு சொந்தக் காரரான இவரை ரசிகர்கள் லட்சிய நடிகர் என்று அழைத்தனர். வசனத்தை ஏற்ற இறக்கத்தோடு கச்சிதமான உணர்ச்சி வெளிப்பாட்டோடு பேசுவதில் தமிழ் சினிமாவில் கிங்காக வலம் வந்தவர் சிவாஜி கணேசன். ஆனால் அவரே “என்னைவிட எஸ் எஸ் ராஜேந்திரன்தான் வசனங்களை மிகச்சிறப்பாக பேசி நடிப்பார். அவரின் தமிழ் உச்சரிப்பு என்னைவிட சிறப்பாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
எஸ் எஸ் ராஜேந்திரனின் வசன உச்சரிப்பு பற்றி ஒரு பத்திரிக்கை பேட்டியில் பேசிய ஜெயலலிதா “நாங்கள் எல்லாம் கொடுக்கப்படும் வசனத்தை ஒரு முறை படித்துவிட்டு, இரண்டாம் முறை படிக்கும்போதுதான் ஏற்ற இறக்கத்தோடுதான் பேசுவோம். ஆனால் எஸ் எஸ் ஆர் அவர்களோ முதல் முறை படிக்கும்போதே எப்படி ஏற்ற இறக்கத்தோடு படிக்கவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டு பேசுவார் . அவருக்கு இயற்கையிலேயே இந்த திறமை அமைந்துவிட்டது” எனப் பாராட்டி பேசியுள்ளார்.
அப்படிப்பட்ட ஒரு நடிகருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதுதான் சோகம். பிஸியான நடிகராக வலம் வந்த எஸ் எஸ் ஆர், 1980 களுக்குப் பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. இவரின் கடைசி திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளியான தீக்குச்சி. இவர் 2014 ஆம் ஆண்டு வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
