தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் மிகப்பரபரப்பாக மாறியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், திமுக கூட்டணியில் நீடித்து வந்த ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம் தற்போது திடீரென கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவின் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், தங்களுக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படாததால் அதிருப்தியடைந்த ஸ்ரீதர் வாண்டையார், இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
இந்த வெளியேற்றத்தைத் தொடர்ந்து, ஸ்ரீதர் வாண்டையார் தனது கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதன் முடிவில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து, வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தனது முழு ஆதரவை வழங்கியுள்ளார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் கும்பகோணம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு சுமார் 74,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர் ஸ்ரீதர் வாண்டையார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதே பழைய கூட்டணிக்கு அவர் திரும்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் இரண்டாவது முக்கிய கட்சி மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆகும். ஏற்கனவே தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், இரண்டு தொகுதிகள் கோரியும், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததாலும் திமுக கூட்டணியில் இருந்து விலகினார். தற்போது வேல்முருகன் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், ஸ்ரீதர் வாண்டையார் அதிமுகவை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.
தற்போது கும்பகோணம் தொகுதியைப் பொறுத்தவரை, அதிமுக கூட்டணியில் அது பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு திமுகவின் சிட்டிங் எம்எல்ஏ அன்பழகன், பாஜகவின் அசோக் குமார், பாமகவின் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஆனந்த் மற்றும் தவெகவின் வினோத் எனப் பலமான போட்டி நிலவுகிறது. சிறிய கட்சிகளின் இந்த விலகல் மற்றும் அணி மாற்றங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் உள்ள ஜாதி ரீதியான வாக்கு வங்கிகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்.
