மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூரைச் சேர்ந்த 29 வயது பிரியங்கா, தன் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தன்னை விட 7 வயது இளையவரான யோகேஷ் பஹிர்வார் என்பவருடன் காதலில் விழுந்தார். பெற்றோரின் சம்மதத்துடன் தங்கள் வீட்டு மாடியிலேயே இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ‘லிவிங்-டுகெதர்’ முறையில் வாழ்ந்து வந்தனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது உறவில், நாளடைவில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளன.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு, பிரியங்கா திடீரென மயங்கிவிட்டதாக யோகேஷ் அவரது பெற்றோருக்குத் தகவல் கொடுத்துள்ளார். பதறியபடி அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, பிரியங்கா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தனது காதலி தற்கொலை செய்துகொண்டதாக யோகேஷ் போலீசாரிடம் கூறி நம்ப வைத்தார். இதனால் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரியங்காவின் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது வெளியாகியுள்ள உடற்கூராய்வு அறிக்கையில், பிரியங்கா தற்கொலை செய்யவில்லை என்பதும், அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதியானது. இதையடுத்து யோகேஷிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், ஆத்திரத்தில் செல்போன் சார்ஜர் வயரால் பிரியங்காவைக் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடியதை அவர் ஒப்புக்கொண்டார். 20 நாட்களுக்குப் பிறகு உண்மைக் கண்டறியப்பட்டு யோகேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
