அவெஞ்சர்ஸ் டீம்ல கூட இப்படி ஒருத்தர் இல்ல… வெள்ளத்தில் இறங்கிய மர்ம மனிதன்… வைரல் வீடியோ…!

By SATHISH R on ஆடி 8, 2026

Spread the love

மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாகப் பிவண்டி பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால், சாலைகளில் இடுப்பளவிற்குத் தண்ணீர் தேங்கிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நகராட்சிப் பணியாளர்கள் யாரும் உதவிக்கு வராத நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஷதாப் என்ற இளைஞர் பொதுமக்களுக்கு உதவத் துணிச்சலுடன் களம் இறங்கினார்.

அனைவரையும் கவரும் விதமாக, ஷதாப் நிஜ வாழ்க்கையில் ஒரு சூப்பர் ஹீரோவாக மாற முடிவு செய்து ‘ஸ்பைடர் மேன்’ ஆடையை அணிந்து கொண்டு தேங்கிய நீரில் இறங்கினார். மழையையும் பொருட்படுத்தாமல், தண்ணீரில் தத்தளித்த வாகனங்களைச் சீரமைத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார். மேலும், சாலைகளில் தேங்கியிருந்த மழைநீரை அகற்றுவதற்கும் தம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்து, அவதிப்பட்ட மக்களுக்குப் பெரும் துணையாக நின்றார்.

   

திரைப்படங்களில் ஸ்பைடர் மேன் மக்களைக் காப்பாற்றுவதைப் பார்த்து ஈர்க்கப்பட்டதால், நிஜ வாழ்க்கையிலும் அதே போன்ற ஒரு பொறுப்புணர்ச்சியுடன் மக்களுக்கு உதவ இந்த ஆடையைத் தேர்ந்தெடுத்ததாக ஷதாப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இக்கட்டான சூழ்நிலையிலும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்குக் கை குலுக்கியும், ‘ஹை-ஃபைவ்’ கொடுத்தும் அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்தார். இந்த சுவாரசியமான மற்றும் நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

   

நெட்டிசன்கள் பலரும் ஷதாபின் இந்தச் சுயநலமற்ற சேவையைப் பாராட்டித் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “சுயநலம் மிகுந்த இந்தத் தற்கால உலகில், தனக்கென்ன லாபம் என்று யோசிக்காமல் உழைக்கும் இவரைப் போன்றவர்கள் ஒரு அரிய வகை” என்றும், “ஸ்பைடர் மேன்: இந்தியப் பதிப்பு” என்றும் சமூக வலைத்தளங்களில் மக்கள் இவருக்குப் புகழாரம் சூட்டி வருகின்றனர். மழையால் ஸ்தம்பித்த ஒரு நகருக்குள், இந்த நிஜ ஸ்பைடர் மேனின் செயல் ஒரு புதிய நம்பிக்கையையும் புன்னகையையும் வரவழைத்துள்ளது.