இந்தியாவில் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் அரசு சார்பில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களை தன்னம்பிக்கையுடன் உருவாக்கி அவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கத்தில் இந்த திட்டங்கள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி பெண்களுக்கான சிறந்த நான்கு திட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

லட்கி பஹின் யோஜனா!
மகாராஷ்டிரா மாநில அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மாநிலத்தின் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 21 முதல் 65 வயதிற்கு உட்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பட முடியும். இதில் தகுதி உள்ள பெண்களின் வங்கி கணக்குகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எழுதியுள்ள பெண்கள் இந்த திட்டத்தில் உடனே விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

சுபத்ரா யோஜனா!
பெண்களுக்கு உதவும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட மற்றொரு திட்டம் தான் இது. ஒடிசா அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் 21 முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஒவ்வொரு பெண் பயனாளிகளுக்கும் ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் இரண்டு தவணைகளில் வரவு வைக்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் பெறுவார்கள். இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் சுபத்ரா டெபிட் கார்டு ஆகும். இதன் மூலமாக அந்த தொகையை நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்கில் மாற்றிக் கொள்ளலாம்.

மகிலா சம்மான் சேமிப்பு சான்றிதழ்!
இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களுக்காகவும் தொடங்கப்பட்ட இந்த திட்டம் ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும். இது பெண்களுக்கு அதிக வட்டி விகிதத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு அளிக்கின்றது. இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி பெறலாம். இந்த திட்டம் இரண்டு வருட காலத்திற்கு மட்டுமே ஆகும். இது பெண்களுக்கு குறைந்த முதலீட்டில் ஒரு நல்ல வருமானத்தை அளிக்கக்கூடிய சிறந்த திட்டமாகும்.

சுகன்யா சம்ரிதி யோஜனா!
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டு வட்டி 8.2% ஆகும். இந்த திட்டம் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளை கொண்ட பெற்றோருக்கானது. இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் ஆண்டுக்கு அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நிதி ரீதியாக பாதுகாப்பது மட்டுமல்லாமல் வருமான வரியின் கீழ் வரிவிலக்கையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் 14 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். பெண் குழந்தைக்கு 21 வயதாகும் போது இந்த திட்டத்தின் கணக்கு முதிர்ச்சி அடையும்.
