மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் வரும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான இகேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பகுதியாக, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வருகிற ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் சிறப்பு இகேஒய்சி முகாம்கள் நடைபெறவுள்ளன.
குடும்ப அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை பயோமெட்ரிக் முறை மூலம் சரிபார்த்து, பதிவினை 100% நிறைவு செய்வதே இந்த சிறப்பு முகாமின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் எவ்வித தடையுமின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுவதோடு, போலி அட்டைகள் ஒழிக்கப்பட்டு விநியோக முறை மேலும் வெளிப்படைத்தன்மையாக்கப்படுகிறது.
எனவே, நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைத்து உறுப்பினர்களும் குறிப்பிட்ட நாட்களில் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று தங்களது விரல் ரேகையைப் பதிவு செய்து ஆதார் இகேஒய்சி சரிபார்ப்பைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் இச்சிறப்பு முகாமினைப் பயன்படுத்தி தங்களின் தகவல்களை விரைவாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
